கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் மீது அடாவடித்தனமான செயற்பாடு – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரை தரக்குறைவாகப் பேசி அடாவடித்தனமான முறையில் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான உரமானியம் பெறுவதற்கான பற்றுச்சீட்டு குறித்த நிலையத்தின் பெண் உத்தியோகத்தரால் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுந்தினம்(வெள்ளிக்கிழமை) திடீரென உள்நுழைந்த நபர் அங்கு பற்றுச்சீட்டு பெற வரிசைப்படி நின்றவர்களை தாண்டிச்சென்று உத்தியோகத்தரிடம் தமக்கு முதலில் வழங்குமாறு கோரியுள்ளார்.
சிறிது நேரம் அமர்ந்திருக்குமாறும் தாம் இன்னமும் மதிய உணவு உட்கொள்ளவில்லை என குறித்த கர்ப்பிணி பெண் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
இதற்கு குறித்த நபர் முதலில் எனது வேலையை முடியுங்கள் நான் யார் என்று தெரியுமா? நான் ஏறாவூர் பிரதேசசெயலக உத்தியோகத்தர் முதலில் எனக்கு வேலையை முடித்துவிட்டுசாப்பிட செல்லுங்கள் என கூறியதுடன், தகாத வார்த்தைப் பிரியோகத்தை மேற்கொண்டிருந்ததுடன், கர்ப்பிணி உத்தியோகத்தர் மீது அவரின் கையில் இருந்த பற்றுசீட்டுபெறும் ஆவணங்களை வீசிஎறிந்துள்ளார்.
குறித்த சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் கர்ப்பிணி பெண் உத்தியோகத்தருடன் அடாவடியான முறையில் செயற்பட்டவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.