கல்வி மட்டத்தில் 9ஆவது நிலையில் வடமாகாணம்!

கல்வி மட்டத்தில் 9ஆவது நிலையில் வடமாகாணம்!

வட மாகாணம், கல்வி மட்டத்தில் 9ஆவது மாகாணமாக விளங்குவதற்கு வட மாகாணசபையே பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

கல்வித் தரத்தில் வடமாகாணம் 9ஆவது இடத்திலும், கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்திலும் இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாகாண சபை உருவாக்கப்பட்ட பின்னரே இந்த நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஏற்று கொண்ட போதும் விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. விஞ்ஞானதுறை சார்ந்தவர்கள், வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டார்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றார்கள். ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களின் 394 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதேபோன்ற ஒரு விபரத்தை தயாரித்து வழங்கி வருகின்றோம்.

மாற்று வழிகளை தேடுமாறு கோரியிருந்தோம். பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்கின்றார்கள். எமது மாகாணத்தில் மட்டும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு மத்திய அமைச்சு நியமனம் கொடுக்கின்றது.

அமைச்சர்களின் விருப்பத்துடன், பாடசாலைக்கு செல்லாதவர்களுக்கும், தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் வழங்கப்படுகின்றது.

கணித பாட ஆசிரியர்களுக்கு 188 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞான பாடத்திற்கு 161 ஆசிரிய வெற்றிடங்களும், ஆங்கில பாடத்திற்கு 51 வெற்றிடங்களும் நிலவுகின்றன.

தமிழ் பாட ஆசிரியர்களுக்கு 99 வெற்றிடங்கள் நிலவுகின்றன. இந்த நியமனங்களை யார் வழங்குவது? மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, வேறு மாகாணங்களில் வழிவகுத்த விடயங்களை மாகாண கல்வி அமைச்சிடம் கொடுத்தோம். அதை யாரும் கேட்பதாக இல்லை.

கடந்த 5 வருடங்களாக மாகாண சபையில் சண்டையும் சச்சரவும் நிகழ்ந்தது. தற்போது, ஓய்ந்து நிம்மதியாக இருக்கின்றது.

மாணவர்கள் அடுத்த மட்டத்தை அடையவில்லை எனில், மாகாணசபையே இதற்குப் பொறுப்பு. பட்டதாரிகளுக்கான நியமனத்தை வழங்க வட மாகாணசபைக்கு வழங்கிய அதிகாரத்தின் பிரகாரம், வெற்றிடங்களாக காணப்படும் இந்த ஆசிரிய வெற்றிடங்கள் ஏன் நிரப்பவில்லை என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net