மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சிலர் இவ்வாறு மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மட்டக்களப்பு மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
எந்தவித பண வசூலிப்பினையும் செய்யுமாறு கோரப்படவில்லையெனவும் சிலர் தங்களது சொந்த தேவைக்காக மாவீரர் தின நிகழ்வினை பயன்படுத்தமுனைவதாகவும் ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளைமறுதினம்(செவ்வாய்கிழமை) தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதி வழங்கியதில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றைய தினம் அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.