சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாக்க வேண்டும்!
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பநிலைக்கு மத்தியில் சிறுபான்மைக் கட்சிகள் தமது சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – இலுப்படிச்சேனை பிரதேசத்தில் புதிதாக விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் (ஞாயிற்றுக்கிழமை) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பிலே எதிர்காலத்தில் உரிமையும் அபிவிருத்தியும் எமது கைகளில் தான் என்பதை அனைவரும் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் புகையிரத தண்டவாளங்கள் போல சமாந்தரமாக இருக்க வேண்டும்
அந்தவகையில் எதிர்வரும் காலத்தில் தேர்தலின் போது தமிழ் சமூகத்தில் உரிமைகளைப் பெறுவதற்காக களமிறங்கிப் போராடும் பிரதிநிதியொருவரைத் தெரிவு செய்யவேண்டும்.
தற்போது அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ள சந்தர்ப்பத்தில் பிரதானமான 17 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளேன்.
இறைவனின் அருளால் எஞ்சியுள்ள ஒரு வருடமும் பத்து மாதங்களுக்கும் கிழக்கு அபிவிருத்தி என்ற எனது அமைச்சு தொடருமென்றால் தமிழ் சமூகம் அரசியலில் கடந்த முப்பது வருடங்கள் மனதில் சுமந்திருக்கும் அபிலாசைகளை பூர்த்தி செய்து காட்டுவேன்” வியாழேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.