ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்!

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்!

ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய், சுன்னாகம், யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அவருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பல வழக்குகள் நிலுவையிலுள்ளன.

அந்த வழக்குகளில் அசோக் மீது பிடியாணை உத்தரவுகள் நீதிமன்றால் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சந்தேகநபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தனது சட்டத்தரணி கீர்த்தனா அயூரன் ஊடாகச் சரணடைந்தார்.

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற இருவரை வெட்டிக் காயப்படுத்திய குற்றச்செயல்கள் இரண்டு தொடர்பில் தனித்தனியே இடம்பெறும் வழக்குகளிலேயே அவர் இன்று நீதிமன்றில் முற்பட்டார். சந்தேகநபருக்கு எதிராக உத்தரவிடப்பட்ட பிடியாணைகள் தொடர்பில் ஆராய்ந்த மன்று, அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net