நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்ல!

நாம் பேரினவாதக் கட்சிகளுக்கு சார்பானவர்கள் அல்ல!

நாம் எந்த பேரினவாதக் கட்சிகளுக்கும் சார்பாக ஒரு காலமும் நடந்ததில்லை, நடக்கப்போவதுமில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கூட்டமைப்பு, ஐ.தே.க.விற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”நாட்டில் தற்போது இரண்டு அணிகள் செயற்பட்டு வருகின்றன. ஒன்று ஜனநாயகத்தை மீறி செயற்படும் அணி. மற்றையது ஜனநாயகத்தை சீர்செய்ய வேண்டும் என்று செயற்படுகின்ற அணி.

இதில் ஜனநாயகத்தை சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோர் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு சார்பாக நிற்கின்றது என்று யாரும் சொல்லாமல், ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக இருக்கின்றது என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக செயற்படப் போவதில்லை மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகச் கூறியிருக்கின்றது. அதே நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பும் காணப்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம்.

நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாகச் செயற்படவில்லை. தற்போது பிரச்சினைக்கு உட்பட்டிருக்கின்ற இந்த விடயத்திலே நாங்கள் ஒரு அணி சார்பாகவே நிற்கின்றோம். எனவே இதனைத் தெளிவாக எமது மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்பது தொடர்பான அணியில் ஒரு அங்கமாக இருக்கின்றோமே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக இல்லை” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net