சர்வதேச நாடுகளின் தேவைக்கேற்ப நாட்டினை ஆட்டுவிக்க முடியாது!

சர்வதேச நாடுகளின் தேவைக்கேற்ப நாட்டினை ஆட்டுவிக்க முடியாது!

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்த சூழ்நிலையினை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு சில சர்வதேச நாடுகளின் தேவைக்கு ஏற்ப இந்த நாட்டினை ஆட்டுவிக்கவேண்டுமானால் அதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த கலை விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

ஹிஸ்புல்லாஹ் கிட்ஸ் முன்பள்ளியின் தலைவர் முகைதீன் சாலிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதெ அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டு நாற்பது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

நாட்டினுடைய நன்மை கருதி நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசிய சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் எதிர்கால சந்ததிக்கு சிறந்த எதிர்காலம் ஒன்றறை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அந்த அடிப்படையில் அரசாங்கத்தில் தான் அமைச்சராக இருக்கின்ற நிலையில் தமது அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கின்றது.

எதிர்க்கட்சியினர் எல்லோரும் இணைந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் இருக்கின்றார்கள். இதனால் தங்களின் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயகத்திற்கு விரோதமான எந்த செயற்பாட்டினையும் செய்வதற்கு ஜனாதிபதி தயாராகவில்லையென்றும் சிறந்த ஒரு பிரதமரிடம் இந்த நாட்டினை ஒப்படைக்கவேண்டும் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகின்றார்.

அதன்காரணமாகவே ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையினை நடத்திவருகின்றார்.

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் கடந்த 26ஆம் திகதிக்கு முன்பாக எவ்வாறான அரசு இந்த நாட்டில் இருந்ததோ அந்த ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்கு தாங்கள் ஆதரவு வழங்க தயார் என எழுத்துமூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான அங்கீகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையினைக்காட்டியபொழுதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 113 ஆசனத்தினைக்காட்டவில்லை.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டுமென சிலர் கூறுகின்றனெரே தவிர இன்றுவரையில் 113பேர் கையொப்பமிட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவில்லை என்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சாடியுள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதராக 100பேர் மட்டுமேயுள்ளனர்.103பேர் பிரதமர் மகிந்தராஜபக்ஸவுக்கு ஆதரவாகவுள்ளனர்.

இதனைவிட 113பேரின் ஆதரவினை யாராவது வெளிப்படுத்தினால் அது தொடர்பிலான இறுதி தீர்மானத்தினை ஜனாதிபதி எடுக்கமுடியும்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமியுங்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த கோரிக்கையினையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கவில்லை.இவ்வாறான நிலையிலேயே அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று இரவு அல்லது நாளை முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம்.எந்த தீர்மானம் எடுத்தாலும் இந்த நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தி இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே உண்டு என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

இதேவேளை சில மேற்கத்தேய நாடுகளின் தேவைக்கு ஏற்ப இந்த நாட்டினை ஆட்டுவிக்கவேண்டுமானால் அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.எந்த சர்வதேச நாடுகளும் தங்களை கட்டுப்படுத்தமுடியாது.

அவ்வாறான ஒரு நிலைக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வவுணதீவில் இடம்பெற்ற சம்பவம் பாரதூரமான சம்பவமாக கருதப்படுகின்றது.

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் ஆயுதங்கள் அபகரிக்கப்பட்ட சம்பவமானது யுத்ததிற்கு பின்னர் இடம்பெற்ற முதலாவது பயங்கரவாத சம்பவமாக நாங்கள் கருதுகின்றோம்.

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பதற்காக ஜனாதிபதி வடகிழக்கு ஜனாதிபதி செயலணியை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான பங்களிப்புடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பல இராணுவமுகாம்கள் அகற்றப்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சகல இனமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிரந்தர தீர்வினை பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளவேண்டுமே தவிர ஆயுதரீதியாக படுகொலைகள் ஊடாக,இனமுரண்பாட்டு ஊடாக எதனையும் அடையமுடியாது என்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியுள்ளார்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net