மன்னாரில் மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி!

மன்னாரில் மண்ணுக்குள் சிக்கி குடும்பஸ்தர் பலி!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உற்பட 5 பேர் குஞ்சுக்குளம் சென்று குறித்த டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிய பின்னர் குறித்த மண் சிலாபத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் 3 உதவியாளர்கள் முன் இருக்கையில் இருந்துள்ளனர்.

5 ஆவது நபர் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றப்பட்ட பகுதிக்கு மேல் ஏறி படுத்துள்ளார்.

குறித்த டிப்பர் வாகனம் குஞ்சுக்குளத்தில் இருந்து சிலாபத்துறை நோக்கி சென்ற நிலையில், சிலாபத்துறை பகுதியில் உரிய இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதன் போது மண் மீது எறி படுத்துள்ள மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையே கொட்டப்பட்ட மண்ணினுள் சிக்கியுள்ளார்.

மண் கொட்டப்பட்ட நிலையில் மீண்டும் குறித்த டிப்பர் வாகனமும் அதில் பயணித்தவர்களும் குஞ்சுக்குளம் பகுதிக்குச் சென்ற நிலையில், குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதி உற்பட ஏனைய மூவரும், குறித்த நபரை தேடிய போது குறித்த நபர் அங்கே இருக்கவில்லை.

மீண்டும் மண் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து பார்த்த போது குறித்த நபர் அங்கே மண்ணில் புதைந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக குறித்த குடும்பஸ்தரை மீட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கெண்டு சென்றுள்ளனர். எனினும் குறித்த குடும்பஸ்தர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த குடும்பஸ்தரின் சடலம் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் நானாட்டான் பிரதேச சபையின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருடையது என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சம்பவம் மேலதிக விசாரனைகளை சிலாபத்துறை மற்றும் முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2877 Mukadu · All rights reserved · designed by Speed IT net