கிராம அலுவலகரின் பழிவாங்கல்!

கிராம அலுவலகரின் பழிவாங்கல்: மனித உரிமை ஆணைக்குழுவினர் எடுத்த நடவடிக்கை!

முன்னாள் போராளி மற்றும் நபர் ஒருவர் தொடர்பில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் மேற்கொண்ட அசாதாரண முறை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

மனித உரிமை ஆணைக்குழு வவுனியா பிராந்திய காரியாலயத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இம்முறைப்பாடு தொடர்பில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இரண்டிற்கு மேற்பட்ட தடவைகள் நேரடி விசாரணைகளை நடாத்தியதுடன், அதிகார துஷ்பிரயோகம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் பழிவாங்கல், அரச நிவாரணத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் இம் முறைப்பாட்டாளர்கள் அவற்றை நிரூபிப்பதற்கு சாதகமான சான்று, ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

குறித்த கிராம அலுவலகரை தவறென இனங்கண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவித்து நடவடிக்கை எடுக்கக்கோரியிருந்தனர்.

இதன்போது அவர்கள் நடவடிக்கை எடுக்க செய்யத்தவறியதால் இவ்விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் பணியிலிருந்து கிராம அலுவலகரை, துணுக்காய் பிரதேச செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ளதுடன் ஒழுங்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 5119 Mukadu · All rights reserved · designed by Speed IT net