மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட இடமளிக்க கூடாது – டி.எம்.சந்திரபால
மீண்டுமொரு யுத்த சூழல் ஏற்பட்டு விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க இடமளிக்க கூடாது என கல்குடா தொகுதி அமைப்பாளர் டி.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலய முன்றலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் காணப்படுகிறார்கள். அதிகமான விதவைகள் உள்ளார்கள்.
தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களும் இணைந்து பொலிஸாருக்கு உதவி செய்ய வேண்டும்.
சில தீய சக்திகள் தமது தேவைகளுக்காக மீண்டும் யுத்த சூழலை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். அதனை எமது மக்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்“ என தெரிவித்துள்ளார்.