இத்தாலியில் பரிதாபமாக பலியான இலங்கை சிறுமி!
ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இத்தாலியில் வசித்து வந்த 12 வயதான ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியே நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வரும் ஷெஹாரா, அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவர் இலங்கையில் வென்னப்புவ, பொரலெஸ்ஸே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி வசித்து வந்த வீட்டின் குளியலறைக்கு வெளியே ஆடை காய வைப்பதற்காக சென்ற போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த உபகரணம் உடைந்து விழுந்த போது சிறுமியும் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இத்தாலிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்துள்ளார்.
இந்நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றுள்ளார்.
ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்வதற்காக இலங்கைக்கு திரும்பி வரவிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.