மன்னார் மனித எலும்புக்கூடுகளை  ஐ.நா பொறுப்பேற்க்குமா?

மன்னார் மனித எலும்புக்கூடுகளை  ஐ.நா பொறுப்பேற்க்குமா?

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள ‘சதொச’ வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன் வைத்து வடக்கு கிழக்கை சேர்ந்த 8 மாவட்டங்களை உள்ளடக்கி, வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் இன்று காலை போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற குறித்த அமைதி போராட்டத்தின் போது மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உற்பட 8 மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட , கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை செய்ய வேண்டும் எனவும், குறித்த புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?, புதைத்தவர்கள் யார்?,என்பது தொடர்பாக வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தனர்.

எனவே ஐ.நா.சபை குறித்த மனித எலும்புக்கூடுகளை பொறுப்பேற்று ஆய்வு செய்து நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததோடு, பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் பிரச்சினை காரணமாக தாம் நம்பிக்கை இழந்து விட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததோடு, குறித்த மனித எலும்பக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகளையும், வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் ஐ.நா.சபைக்கு எழுதப்பட்ட மகஜர் ஏற்பாட்டுக் குழுவினரால் வாசிக்கப்பட்டதோடு,ஐ.நா.சபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8510 Mukadu · All rights reserved · designed by Speed IT net