முதலைகளின் நடமாட்டத்தினை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை!
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கரையோர பிரதேசங்களில் உள்ள இடிமண் ஆறு, இப்றாகிம் துறை ஆறு, இறால்குழி ஆறுகளில் பெருமளவில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் நன்னீர் மீன் பிடியாளர்கள், கரையோர தோட்டச் செய்கையாளர்கள் என பலரும் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
மழை வெள்ளப் பெருக்கை அடுத்து பெருமளவிலான முதலைகள் கரையோர வயல் நிலங்கள் மற்றும் ஆற்றங்கரையில் உலாவுவதால் கரையோரங்களில் குடியிருக்கும் குடும்பங்களும் பெரும் அச்சமடைந்துள்ளதுடன், முதலைகளை விரட்டியும் வருகின்றனர்.
இதேவேளை இதுவரையில் இக்கரையோர ஆறுகளான இப்றாகிம் துறை ஆற்றில் தொழில்களை மேற்கொள்ளச் சென்ற ஒன்பது பேர் அண்மைக் காலங்களில் பலத்த முதலைக் கடிக்கு உள்ளாகி பெரும் ஆபத்துகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே பொது மக்களின் நலன் கருதி முதலைகளின் நடமாட்டத்திற்கு வழி வகைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.