ஜனாதிபதியின் தன்னிச்சை செயற்பாட்டிற்கு மன்னார் மறை மாவட்டம் கண்டனம்!
மன்னார், மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டிற்கு மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐனாதிபதி இந்த முயற்சியை உடனடியாக நிறுத்தி, நேரடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு சரியானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”தற்போது 302 ஏக்கர் காணியை மட்டும் புனித பூமியாக பிரகடனப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் வர்த்தமானி அறிவித்தலின் மாதிரி வரைபு ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மாதிரி வரைபின்படி தற்போது மடு தேவாலயத்திற்கு உரிய ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணியை புனித பூமி என்ற போர்வையில் 302 ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்படும் ஒரு செயலாக கத்தோலிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எதிர்வரும் 16ஆம் திகதி மன்னார் பொது விளையாட்டரங்கில் நடை பெறவிருக்கின்ற தேசிய நத்தார் தின விழாவில் இது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐனாதிபதி செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இவ்விடயத்தை உடனடியாக நிறுத்தி, சரியானதொரு முடிவை எமது மக்களுக்கும், மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.