விசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்!
விசாரணை என்ற பெயரில் முன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வட.மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அரசாங்கம் இவ்வாறன செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசியை 19.12.2018ஆம் திகதி மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனநாயக போராளிகள் கட்சி ஆரம்பிக்கப்பட முன்னரும் அதற்குப் பின்னரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்.
அண்மைக் காலத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் வேந்தன் மற்றும் அதன் தலைவர் கதிர் ஆகியோரும் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்கு உட்பட்டிருக்கின்றனர்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் மூன்று பிரதானிகளையும் குறிவைத்து விசாரணைக்குட்படுத்துவது அவர்களை அச்சுறுத்தி,அவர்களது ஜனநாயக நீரோட்ட இணைவை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டதாகவே பார்க்கப்படவேண்டும்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளாக இருந்தவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தமது கட்சியை ஆரம்பித்து வெளிப்படையாக செயல்படுகின்றவர்கள்.
இக் கட்சியின் உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆகும்” என சீ.வீ.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.