மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது!
மட்டக்களப்பு-ஊறணி நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு பொலிஸார் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று காலை 10.30 மணிக்கு விசாரணை ஒன்றிற்காக இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சென்றிருந்த வேளை, அவர்கள் மீது அடையாளம் தெரியாத மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு பொலிஸார் மட்டு.மாவட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் மேற்கொண்ட குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 24, 30 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு ரூபன் என அழைக்கப்படும் மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.