திருகோணமலையில் அதிகரிக்கும் காய்ச்சல்: கர்ப்பிணி பெண் உயிரிழப்பு!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக ஏழு மாத கர்ப்பிணி பெண்ணொருவர் உட்பட இருவர் நேற்று உயிரிழந்துள்ளதாகவும் நான்கு பேர் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் திருகோணமலை – நித்தியபுரி, முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 31 வயதுடைய எஸ். அகிலவாணி எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நிலாவெளி இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தோட்டம் பகுதியை சேர்ந்த இருவர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுகவீனமுற்று இருக்கின்றவர்கள் அதிகளவில் கர்ப்பிணி பெண்கள் எனவும் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு செல்லுமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மேலும் இருந்த பெண்களுக்கு எச் 1 என் 1 தொற்று நோய் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் உயிரிழந்தவர்களின் இரத்த பரிசோதனைகள் எம். ஆர். ஐ பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரொட்ரிகோ தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஒரு வகையான காய்ச்சல் பரவி வருவதாகவும் அதிகளவில் பெண்கள் சிறு குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.