மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் உண்ணாவிரதம்!

மட்டக்களப்பு, காந்தி பூங்காவில் நான்கு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் தனது கணவனை விடுதலைசெய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் இன்று முற்பகல் முதல் ஈடுபட்டுவருகின்றார்.

கடந்த 30ஆம் திகதி வவுணதீவில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள அஜந்தன் எனப்படும் சி.இராஜகுமாரனின் மனைவி மற்றும் பிள்ளைகளே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தனது கணவன் கைதுசெய்யப்பட்டு 18 தினங்களை கடந்துள்ள நிலையிலும், இதுவரையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தாத நிலையில் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே குறித்த தாய் மற்றும் பிள்ளைகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது கணவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அதனை பொலிஸாரும் கூறுகின்றனர். ஆனால் அவரை ஏன் தொடர்ந்து தடுத்துவைத்துள்ளார்கள் என்பது தெரியாத நிலையில் உள்ளதாக உண்ணாவிரததத்தில் ஈடுபட்டுள்ள செல்வராணி இராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 தினங்களாக எந்தவித உதவிகளும் இன்றி கைக்குழந்தைகளுடன் கடுமையான கஸ்டங்களை தாங்கள் எதிர்நோக்கி வருவதாகவும், தமது கணவனே தங்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்கி வந்த நிலையில் தற்போது எந்தவித உதவிகளும் இல்லாத நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது கணவன் குற்றவாளியென்றால் நீதிமன்றில் நிறுத்தி குற்றத்தினை நிரூபித்து தண்டனை வாங்கிக்கொடுங்கள், அவ்வாறு இல்லாவிட்டால் அவரை விடுதலைசெய்யுங்கள், அவரை விடுதலை செய்யும் வரையில் நானும் எனது பிள்ளைகளும் இந்த சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தினை தொடர்வோம் என்று கூறியுள்ளார்.

இதேவேளையில் குறித்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net