மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

மானிப்பாயில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது!

மானிப்பாய் பிரதேசத்தில் ஆவாக்குழுவைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களில் இரண்டு பேர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆகியோருடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் 6 வாள்களுடன் வான் ஒன்றில் பயணித்த போதே, கைது செய்யப்பட்டதாக வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழு தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விசாரணைகளின் பின்னர் குறித்த 11 பேரையும் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net