உறவினரின் மரண வீட்டிற்கு சென்று திரும்பிய வவுனியா சிறுவன் விபத்தில் பலி!
வவுனியா – தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சி, முறிகண்டி பகுதியில் வைத்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே சோகமயமாக்கியுள்ளது.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
தோணிக்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் கிளிநொச்சியில் உள்ள உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு நேற்று மதியம் தனது மாமாவுடன் வவுனியா நோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் குழாய் கிணறு பொருத்தும் இயந்திரத்துடன் பயணித்த கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சிறுவன் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் லிதுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


