வவுனியா மனித உரிமை அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு!

வவுனியா மனித உரிமை அலுவலகத்தில் முன்னாள் பிரதேச சபை செயலாளர் முறைப்பாடு!

வவுனியா வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபையில் செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவர் ஓய்வு பெற்று ஒருவருடம் கடந்த நிலையிலும் தமது ஓய்வூதியத்தினை வழங்க வடமாகாண பிரதிப் பிரதம செயலகம் பின்னடித்து வருவதாகவும் இதனால் அரச ஊழியராக நான் மிகவும் மன முடைந்து உளப்பாதிப்படைந்துள்ளதாகவும் இதற்கான ஒரு தீர்வினைப் பெற்றுத்தருமாறு வவுனியா மனித உரிமை அலுவலகத்தில் அரச ஊழியர் ஒருவர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

இவ்விடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா வெங்கலச் செட்டிகுளத்தில் 2012, 2013 கடந்த இரண்டு வருடங்களாக பிரதேச சபைச் செயலாளராக கடமையாற்றிய அரச ஊழியர் ஒருவருக்கு 2013ஆம் ஆண்டு உள்ளுராட்சி திணைக்களம் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடங்கள் பணியாற்றிய பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு வவுனியா சுகாதாரத்திணைக்களத்திற்கு திரும்பவும் இடமாற்றம் செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் பணியாற்றிய நிலையில் கடந்த 20.02.2018 அன்றைய தினத்திலிருந்து முன்னாள் பிரதேச சபை செயலாளரான அரச ஊழியர் ஓய்வு பெற்றுள்ளார்.

குறித்த அரச ஊழியருக்கு எதிராக வெங்கலச் செட்டிகுளத்தில் பிரதேச சபை தவிசாளர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவருக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொண்டுள்ளதாகவும் அவரது உத்தரவுகளை பின்பற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் ஒருவருடத்தின் பின்னர் ஆதாரமற்ற நிதி மோசடிக்குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

எனினும் முன்னாள் தவிசாளரின் தவறான விடயங்களை நான் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது அதற்கு நான் எவ்வாறு துணைபோவது என்று ஓய்வு பெற்ற முன்னாள் பிரதேச சபை செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து பல்வேறு விசாரணைகளின் பின்னர் நீண்ட காலமாக அரச சேவையிலுள்ளவர்களுக்கு இவ்வாறான சம்பவம் மிகவும் பாதிப்படையச் செய்துள்ளது எனவே எனது ஓய்வூதியத்தினைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதிப் பிரதம செயலகத்தின் நடவடிக்கையினால் மிகவும் உளப்பாதிப்படைந்து மன உழைச்சல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

மாகாணப் பொதுச்சபை ஆணைக்குழுவின் தீர்மானத்தை மதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுச்சபை ஆணைக்குழுவினரால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவில்லை குறித்த அரச ஊழியரான முன்னாள் பிரதேச சபைச் செயலாளருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை ஏற்கனவே இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தும் தவறு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அரச ஊழியரை விடுவிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி இடம்பெற்றிருப்பின் குறித்த அரச ஊழியருக்கு எதிராக பொலிசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவேண்டும் ஆனால் எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை.

எமது நடவடிக்கைகள் தொடாந்து இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net