கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை: தொடர்ந்தும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை தொடர்கின்றது – தொடர்ந்தும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில்!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரான வானிலை தொடர்கின்றது எனினும் தொடர்ந்தும் மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்றனர்.

கடந்த 21ம் திகதி பெய்த பலத்த மழை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.

அதிக மழை காரணமாக குளங்கள் வான் பாய ஆரம்பித்தன. என்றுமில்லாதவாறு குளங்கள் 2 அடிக்கு மேல் வான்பாய ஆரம்பித்தது. இதனால் மக்களின் இருப்பிடங்கள், பல பிரதேசங்கள் நீரில் மூழ்கின.

சில இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டது. பல பகுதிகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் படையினரும், பொலிசாரும் மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு அழைத்து சென்றனர்.

இதேவேளை இரணைமடு குளத்தின் வான்கதவுகள் அனைத்தும் திறந்து விடப்பட்டன. நேற்றைய தினம் இணைமடு குளத்தின் நீர்மட்டம் 39.3 அடியாக காணப்பட்டது.

குளத்திற்கு அதிக நீர் வருகை தந்தமையால் குளத்தின் 14 கதவுகளும் திறந்து விடப்பட்டன.

இதேவேளை இன்றய தினம், நேற்றைய தினம் ஆகிய நாட்களில் மேலும் மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டபோதிலும் மழை கிடைக்கவில்லை.

இதனால் ஓரளவு மக்கள் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டனர். எனினும் இரணைமடு குளத்திற்கு அதிகளவான நீர் வருகை தருவதால் குளத்தின் 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று பகல் குளத்தின் நீர்மட்டம் 36.7 அடியாக காணப்பட்டது, எனினும் குளத்திலிருந்து அதிக நீர் வெளியேறுவதால் தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டாவளை பிரதேச செயலகம் உள்ளிட்ட பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 9975 குடும்பங்களை சேர்ந்த 33008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அப்புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

இவர்களில் 2375 குடும்பங்களை சேர்ந்த 7849 பேர் 24 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களிற்கான சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கரைச்சி பிரசே செயலர் பிரிவில்,
மொத்தமாக 1177 குடும்பங்களை சேர்ந்த 4124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 416 குடும்பங்களை சேர்ந்த 1509 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில்,
7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 1797 குடும்பங்களை சேர்ந்த 5744பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில்,
1412 குடும்ப குடும்பங்களை சேர்ந்த 4852 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. இதேவேளை 162 குடும்பங்களை சேர்ந்த 596பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கிளிநொச்சி  மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஊடகங்கிற்கு தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net