வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு சி.வி. வேண்டுகோள்!
வட. மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வட.மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வட.மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடைமழை காரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம், மலையக பகுதிகளில் வாழும் தமிழ் மக்களும் தம்மால் முடிந்தளவு உதவிகளை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.
ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் மாற்று உடை இன்றி பெரிதும் அவதிப்படுவதால், அவர்களுக்கான மாற்று உடைகளை வழங்குவதற்கான உதவிகளை வழங்குவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
அத்துடன் அடுத்த சில நாட்களுக்கான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கான நுளம்பு வலைகள், பால்மா ஆகியவற்றையும் வழங்கி உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.