தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்!

தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு இவ்வாறு காணிகளை விடுவிப்பதன் மூலமாக மீள்குடியேற்றம் முழுமையடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணி விடுவிப்புத் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும் 2018 ஆம் ஆண்டு அதாவது இந்த வருட இறுதிக்குள் முழுமையாக விடுவிக்கப்படுமென ஐனாதிபதி அறிவித்திருந்தார்.

ஆனால் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் தற்போதும் பல ஆயிரக்கணக்கான பொது மக்களின் காணிகள் படையினர் வசம் உள்ளன.

அவற்றில் சில ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாளை புதன்கிழமையும் இங்கு ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவிருக்கின்றன.

அதாவது வலி வடக்கில் தையிட்டி தெற்கு. தையிட்டி வடக்கு, பலாலி வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக 40 ஏக்கர் காணிகள் 26 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளது.

இதில் பலாலி வடக்கு ஒட்டகப் புலத்தைச் சேர்ந்த பகுதிகளே அதிகளவில் விடுவிக்கப்படவுள்ளன. ஆகவே படையினர் வசமுள்ள பொதுமக்களின் ஏனைய காணிகளையும் விடுவிக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்.

இதற்கமைய எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக மக்களின் காணிகளை விடுவிக்கும் பணிகளை விரிவுபடுத்த வேண்டும். அத்தோடு வல்லை – அராலி வீதியையும் விடுவித்து மக்கள் பாவனைக்கு அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே இந்த வருட இறுதிக்குள் பொது மக்களின் காணிகள் அனைத்தும் அந்த மக்களிடம் வழங்கப்படுமென ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தற்போதும் படையினர் வசமுள்ள அனைத்துக் காணிகளையும் விடுவிக்க வேண்டும்.“ என்றும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net