சீரற்ற காலநிலையால் வடக்கில் 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் வடக்கில், 73 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்லாயிரக்கணக்கானோர், இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த இயற்கை அனர்த்தங்களினால், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. வடக்கில் பெய்துவரும், அடைமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளம், மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக 22 ஆயிரத்து, 823 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 343 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மூவாயிரத்து, 297 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரத்து, 342 பேர், சுமார் 35 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு மற்றும் அடைமழை காரணமாக 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 227 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்த மழை வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் அடை மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்து, 688 குடும்பங்களை சேர்ந்த 38 ஆயிரத்து, 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2 ஆயிரத்து, 64 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து, 882 பேர், 20 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில், 7 வீடுகள் முழுமையாகவும், 221 வீடுகள் பகுதியவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, வெள்ளத்தினால் முல்லைத்தீவு மாவட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 ஆயிரத்து, 520 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து, 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிலையம் அறிவித்துள்ளது.
1200 குடும்பங்களைச் சேர்ந்த, மூவாயிரத்து, 365 பேர் இடம்பெயர்ந்து, 13 முகாம்களில் தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்ற நிலையில், பல தரப்பினரும் உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்காயிரத்து, 257 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து, 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் இடம்பெயர்ந்த நிலையில், இடைத்தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் வெள்ளத்தினால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறே வவுனியா மாவட்டத்தில் 132 குடும்பங்களைச் சேர்ந்த 455 பேர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், யாரும் இடம்பெயர்ந்திருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
அதேபோல், மன்னார் மாவட்டத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 85 பேரும் இடைத்தங்கல் முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.