தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும்!

தென்பகுதியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை வடக்கிலும் எடுக்கப்பட வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களது கிணறுகளில் மழைவெள்ளம் புகுந்துள்ளதால் அந்த நீரை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கின்றனர்.

அண்மையில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தங்களது கிணறுகளில் மழைநீருடன் சேறும் சேர்ந்துள்ளதால், அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும், இதனால் தங்களது நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தங்கியிருந்த இடைத்தங்கல் முகாம்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்ட முதன்மைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு, பிரான்சில் இயங்கும் ரீ.ஆர்.ரீ வானொலியின் சமூகப் பணிக் குழுவினரின் பங்களிப்புடன் ஐந்து முகாம்களில் தங்கியுள்ள சுமார் 464 குடும்பங்களுக்கு நான்கு இலட்சம் ரூபா செலவில் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார். இதன்போதே மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த மக்கள், வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான மாடுகளும், ஆடுகளும், ஆயிரக்கணக்கில் கோழிகளும் உயிரிழந்துள்ளதாகவும், நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த தாம் இந்த வருடம் நிறைவான விளைச்சலை எதிர்பார்த்திருந்ததாகவும், குடலை கதிர் பிடித்துள்ள நிலையில் தற்போதைய மழை எமது எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது என்றும் தெரிவித்தனர்.

அடுத்த சில தினங்களில் மழை வெள்ளம் வடிந்துவிடும். நாங்கள் வீடுகளுக்குத் திரும்பியதும் முக்கியமாக நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமத்தை எதிர்கொள்ளப் போகிறோம் என்று கூறினர்.

இதே போன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகளுக்கும் வெள்ள அனர்த்தத்தினல் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிரிழந்த கால்நடைகளுக்கும் நிவாரணம் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் விரைந்து நடைவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் தென்பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது எவ்வளவு விரைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக நஸ்டஈட்டை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டதோ அதே போன்று வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இப் பேரழிவிற்கு நஸ்டஈட்டை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போதைய நிலையில் கிணறை இறைப்பது கடினம். நாங்கள் முயற்சித்தோம். மூன்று நீரிறைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தியும் இறைக்க முடியவில்லை. இதனால் சுகாதாரமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.

யுத்தத்தால் அனைத்தையும் இழந்து, ஓரளவிற்கு தலை நிமிரலாம் என்று எண்ணியிருந்த வேளையில், மழையும் வெள்ளமும் எங்களது வாழ்க்கையை மீண்டும் சோதித்துள்ளது. எமக்கு என்று விடிவுகாலம் பிறக்குமோ என்று அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

‘நாங்கள் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று வாக்களித்தவர்கள் எங்களைக் கைவிட்ட நிலையில், நீங்களும் எம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே என்ற எண்ணத்தில் எங்களைப் பார்க்க வந்ததுடன், தனிப்பட்ட முயற்சியில் எங்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கியிருக்கிறீர்கள்.

பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் குறிப்பாக சின்னையா ஜெயரட்ணம், சுபாஸ்கரன், புகழரசன் ஆகியோர் மிகவும் நேர்த்தியாகத் தகவலைத் திரட்டி அனைவருக்கும் நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல்பீட உறுப்பினர் அருந்தவராஜா, மத்தியகுழு உறுப்பினர் மதிகரன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.

Copyright © 5271 Mukadu · All rights reserved · designed by Speed IT net