பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!- சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் 7.2 ரிக்டர் பரிமாணத்தில் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.39 அளவில் Pondaguitan நகரிலிருந்து தென்கிழக்காக 62 மைல்கள் தொலைவில் உள்ள டவாவோ பகுதியில் பாரிய அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

இதன்போது, ஆழிப்பேரலைகள் ஏற்படலாம் என அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீவிரத்தன்மை தொடர்பாக அந்த மையம் தகவல்களை திரட்டி வருவதாக அறிவித்துள்ளது.
டவாவோ ஒரியண்டல் பிரதேசத்தின் ஆளுநர் ஜெனரோசோ நகரத்தின் கிழக்குப் பகுதியிலேயே இன்று முற்பகல் முதலில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு ஆழிப்பேரலை தாக்கம் ஏற்பலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நிலநடுக்கம் பற்றிய ஆய்வு நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையொன்றில், பிரதான அதிர்வு உணரப்பட்ட பின்னர் சிறு அதிர்வுகளும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர குறிப்பிட்ட சில கரையோரப் பகுதிகளுக்கு வலுவான கடல் அலைகளில் தாக்கும் இருப்பதுடன், கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமைக்கு மாறான கடல் அலைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும். இன்று மதியம் 12 தொடக்கம் 2 மணிவரை கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆழிப்பேரலை எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கரையை தொடலாம் எனவும். அது பெரும்பாலும் வலுவிழந்து 1 மீற்றருக்கும் குறைவான உயரத்தை கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் தொடர்ச்சியாக கொந்தளிப்பான கடல் அலைகள் ஏற்படலாம் எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.