கைநழுவிய வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு மலர்ந்துள்ளது!
கடந்த காலத்தில் கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன்மூலம் புத்தம்புது வழிகளை நோக்கி எம்மை இட்டுச்செல்லக்கூடிய, வரலாற்றில் மிக முக்கியமான காலப்பகுதியே இன்று மலர்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மலர்ந்துள்ள ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்து வந்த வருடத்தில் எமது வாழ்க்கையில் முகங்கொடுக்க நேர்ந்த வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீண்டும் மீட்டிப் பார்ப்பதற்கான சிறந்த தருணமாகும் என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
கடந்த காலத்தை மீண்டும் மீட்டிப்பார்ப்பதன் மூலமே மனிதன் வளமான எதிர்காலத்தை அடைகின்றான் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, கடந்த வருடத்தின் அனுபவங்களிலிருந்து கற்கவேண்டிய பாடங்களைக் கற்று அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதன் மூலமே புதிய எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கிக்கொள்ள முடியுமென்றும் கூறியுள்ளார்.
அத்தோடு, அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு, மலரும் 2019ஆம் புத்தாண்டில் ஒழுக்கம், நல்லிணக்கம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றை அடையக்கூடிய பரந்த பாதையில் முன்பைவிட கூடுதல் கரிசனையுடனும் கவனத்துடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அந்தவகையில் அனைவரது வாழ்க்கையும் வளமும் செழிப்பும் மிக்கதாக அமையவேண்டுமெனவும், எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் எனவும் மனப்பூர்வமாக பிரார்த்திப்பதாக ஜனாதிபதி தனது வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

