சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்!

சிவப்பு உடை அணிந்து வந்த பெண்ணை எச்சரித்த நீதிவான்!

மல்லாகம் நீதிவான் நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை எச்சரித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமான முறையில் சமூகமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு மூத்த பெண் சட்டத்தரணி திருமதி சிவபாதத்தை அழைத்து நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா ஆலோசனை வழங்கினார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்து புத்தாண்டில் நேற்றுக் காலை ஆரம்பமானது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் வழக்குகள் விசாரணைக்கு வந்தன. வழக்கு ஒன்றில் முன்னிலையாகியிருந்த பெண் ஒருவர் சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.

அவரது ஆடை தொடர்பில் விசனம் தெரிவித்த நீதிவான், நீதிமன்றுக்கு நாகரிகமாக சமூகமளிக்கவேண்டும் என்று எச்சரித்தார். ஒழுக்கமுடைய இடமாக நீதிமன்றம் உள்ளது என்றும் நீதிவான் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பெண் சார்பில் ஆண் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியிருந்தார். அதனால் மன்றில் அமர்ந்திருந்த மூத்த பெண் சட்டத்தரணியை அழைத்த நீதிவான், நீதிமன்றுக்கு எவ்வாறான உடை அணிந்து வருகை தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அறிவுரை வழங்குமாறு பணித்தார்.

நீதிமன்றுக்கு வருகை தருவோரின் உடை தொடர்பில் நீதிமன்ற பொலிஸ் அலுவலகர் கண்காணிப்பது அவசியம். அந்த நடைமுறையே அனைத்து நீதிமன்றங்களிலும் பின்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © 0995 Mukadu · All rights reserved · designed by Speed IT net