சபாநாயகர் கரு ஜேயசூரிய இன்று கிளிநொச்சி விஜயம்.

சபாநாயகர் கரு ஜேயசூரிய இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த அவர் வெள்ளத்தால் பாதிக்கக்பட்டவர்களிற்கு நட்டஈடுகளை வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களிற்கான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதியையும் கையளித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்த கருஜெயசூரிய மற்றும் அமைச்சர் டயா கமகே, ராஜாங்க அமைச்சர் விஜயகலா, பா. ம உறுப்பினர்களான சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட இவர்களிற்கு வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அரசாங்க அதிபர் விளக்கமளித்தார்.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் படையினர், பொலிசார், திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னரே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

குறித்த கலந்துரையாடலின்போது உரையாற்றிய சபாநாயகர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவுதல், அவர்களை பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் அதிகாரிகள், படையினர் சிறப்பாக செயற்பட்டமைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதேபோன்று தென்னிலங்கையிலிருந்து பல்வேறு உதவிகளை செய்ய பலரும் முன்வந்ததாகவும், இதேபோன்று அனைத்து மக்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் வகையில் நடக்க முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சபாநாயகர்,
இங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவ முன்வந்துள்ளமை தொடர்பில் கரு்து தெரிவித்தார். இவர்கள் எமது சகோதரர்கள் எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் என்ன நிலை காணப்படுகின்றது என்பது தொடர்பில் அவரிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது,
அது முடிவுக்கு வந்தது எனவும் அவர் தெரிவித்தார். மேற்கொண்டு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து, பா ம உறுப்பினர் சேனாதிராஜா அவர்களிடம் அவ்விடயம் தொடர்பில் கேட்கப்பட்டது. தாம் எதிர்கட்சி தலைவர் பதவி தொடர்பில் நீதிமன்றத்திற்கு செல்லப்போவதில்லை எனவும், அரசியலமைப்புக்கு அமையவே தாம் அக்கோரிக்கையை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net