அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!

அதிபர் இன்மையால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிப்பு!

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லை கிராமமான கோவில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒரு வருடமாக அதிபர் நியமிக்கப்படவில்லை என தெரிவித்து பெற்றோர்கள், பழைய மாணவர்களினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் சு. அன்னமலரிடம் நேற்று(புதன்கிழமை) இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கையளிக்கப்பட்டுள்ள குறித்த மகஜரில்,

“கடந்த ஒருவருடமாக எமது பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படவில்லை. முன்னர் கடமையாற்றிய அதிபர் இடமாற்றம் பெற்றுசென்றிருந்தாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே பாடசாலை தற்போதும் இயங்கிவருவதாக பாடசாலைசமூகம் எமக்கு கூறுகின்றது.

தற்போது பாடசாலைக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் பாடசாலையின் மாணவர்களையோ, உபகரணங்களையோ சரியான முறையில் கவனிப்பதில்லை. பாடசாலையின் சிற்றுழியர், காவலாளி போன்றோர் உரியமுறையில் தமது கடமைகளை மேற்கொள்வதில்லை.

பாடசாலையின் ஆசிரியர்கள் இருபிரிவாக செயற்பட்டுவருகின்றனர். எமது பாடசாலை பின்தங்கிய பகுதியில் காணப்பட்டாலும் கடந்த காலங்களில் பல்வேறு துறைகளிலும் வெற்றி நடைபோட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே தற்போது அதில் வீழ்சிஏற்பட்டுள்ளது.

இவைஅனைத்திற்கும் காரணம் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர் ஒருவர் இல்லாமையே என்பதை எம்மால் ஊகிக்கமுடிகின்றது. குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகளிற்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

வலயகல்வி பணிப்பாளர் எமக்கு ஒரு வாரத்திற்குள் நல்லதீர்வுவழங்காவிட்டால் நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்“ என அந்த மகஜரில் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரிகளிற்கு தெரியபடுத்தவுள்ளதாக வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் சு. அன்னமலர் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net