யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம்!

யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மற்றுமொருவர் இன்று உயிரிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமத்தைச் சேர்ந்த 71 வயதான சின்னத்தம்பி கந்தையா என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் விபத்து ஏற்பட்ட நிலையில் மீசாலையைச் சேர்ந்த 38 வயதான கந்தசாமி விமலரூபன் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

விபத்தின் போது படுகாயம் அடைந்த மற்றுமொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் டிப்பருடன் ஹைஏஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய பஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக கொழும்புக்குச் சென்று கட்டுப்பணம் செலுத்தித் திரும்பிய வழியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை 3.45 மணியளவில் முகமாலைப் பகுதியில் ஒரு டிப்பர் வாகனத்தைப் பொலிசார் மறித்துச் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ஹைஏஸ் மோதியுள்ளது.

வாகனத்தில் பயணித்த மூவரும் படுகாயங்களுடன் பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். விமலரூபன் ஸ்தலத்தில் உயிரிழந்ததை பளை வைத்தியசாலை உறுதி செய்தது. ஏனைய இருவரும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சின்னத்தம்பி கந்தையா சிகிச்சை பயனளிக்காத நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

குறித்த விபத்து தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Copyright © 7648 Mukadu · All rights reserved · designed by Speed IT net