மட்டக்களப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கவலையளிக்கும் செயல்!
மட்டக்களப்பில், வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினை வரவேற்கும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்ளாமல் சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கும்புறுமூலையில் வீடமைப்பு திட்டத்தினை திறந்து வைப்பதற்காக அமைச்சர் வருகைதந்துள்ளார்.
மீண்டும் வீடமைப்பு அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மட்டக்களப்புக்கு வருகை தரும் அமைச்சரை வரவேற்கும் வகையில் கல்லடி பாலத்திற்கு அருகில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததன.
காலை 7.00 மணி முதல் பெருமளவான பொதுமக்கள் கல்லடி பாலத்தில், அமைச்சரை வரவேற்பதற்காக குழுமியிருந்தனர்.
சுமார் 9.30 மணியளவில் கல்லடி பாலத்தினை கடந்து அமைச்சரின் வாகனங்கள் சென்ற நிலையில் குறித்த நிகழ்வில் அமைச்சர் பங்கேற்கவில்லை.
கல்லடி பாலத்தடியில் அமைச்சருக்கு வரவேற்பளித்து அங்குள்ள ஒளவையார் சிலைக்கு மாலையணிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைச்சர் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் சென்றமை தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லடி பாலத்தில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்குமேல் கடும் வெயிலுக்கும் மத்தியில் அமைச்சரை வரவேற்பதற்காக நின்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





