விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், கருணாவும்!

விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், கருணாவும்!

மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு இராஜாங்க அமைச்சர் அமீரலி எடுத்துவரும் முயற்சியைக் கைவிடுமாறு கோரி விவசாயிகளால் இன்று செங்கலடி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

வாகனேரி திட்ட முகாமைத்துவ குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழுள்ள 14 அமைப்புக்களின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், கருணா என அழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மத்திய நீர்ப்பாசன திட்டத்தின் கீழுள்ள வாகனேரி நீர்ப்பாசன திட்டமானது பல வருடங்களாக உறுகாம நீர்ப்பாசன திட்டத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்திலிருந்து வாகனேரித் திட்டத்தை பிரிப்பதற்கு எந்தவொரு விவசாயிகளும் விரும்பாத நிலையில் புதிதாக நீர்பாசன இராஜாங்க அமைச்சு பொறுப்பினை பெற்றவர் விவசாய அமைப்புகளிடம் எந்த ஆலோசனைகளையும் பெறாமல் வாகனேரி திட்டத்தினை பிரிப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.

அவரின் இந்த செயலை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அங்கு கலந்து கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தனிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

வாகனேரி திட்டம் தனியாக பிரிந்து செய்லவதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

விவசாயிகள் தொடர்பான திட்டங்களை கொண்டு வரும் போது சம்மந்தப்பட்டவர்களுடன் முதலில் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

திட்ட முகாமைத்துவகுழு, மாவட்ட அபிவிருத்திக்குழு போன்றவற்றில் ஆராயப்பட்டு உரிய இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது வழமையாகும்.

ஆனால் தற்போது அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி வாகனேரி திட்டத்தினை பிரிப்பதற்கு எடுத்துள்ள முயற்சியினால் பல விவசாய குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும்.

வாகனேரித் திட்டமானது உறுகாமத் திட்டத்திலிருந்து எக்காரணம் கொண்டும் பிரிந்துசெல்ல கூடாது.

வாகனேரி திட்டம் பிரிந்து செல்ல வேண்டும் என்றால் பெரும்பகுதி நிலப்பரப்பனைக் கொண்ட கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேசத்தில் திட்டம் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net