அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் ஏன் பிணை வழங்க முடியவில்லை?
மனைவி பிள்ளைகளை பிரிந்து 11 மாதம் சிறையிலிருந்த அர்ஜூன் அலோசியசிற்கு பிணை வழங்க முடியும் என்றால், 11 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”அர்ஜுன் அலோசியஸ் குற்றமிழைத்தாரா என்பது தொடர்பாகவோ அல்லது அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறித்தோ நான் கருத்து தெரிவிக்க போவதில்லை.
ஆனால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சட்டத்தரணியின் வாதம் குறித்தே நான் இங்கு எடுத்துரைக்க விரும்புகிறேன்.
அர்ஜுன் அலோசியஸ் 11 மாதங்களாக மனைவியை, பிள்ளைகளை பிரிந்து வாழ்வதாகவும், கணவனை பிரிந்து மனைவி, பிள்ளைகள் இருக்க முடியாது என்று கூறி பிணை கோரப்பட்டதற்கு அமைய அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
11 மாதங்களாக ஒரு குடும்பம் தனித்திருக்க முடியாது என பிணை வழங்கப்படும் பட்சத்தில், 11 வருடங்களாக தமது மனைவி, பிள்ளைகளை பிரிந்து அரசியல் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கு ஏன் பிணை வழங்க முடியாது” என கேள்வி எழுப்பினார்.