//anjeng வடக்கின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை மஹிந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது! | Mukadu

வடக்கின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை மஹிந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது!

வடக்கின் பிரச்சினைகளை தீர்க்கும் வாய்ப்பை மஹிந்த அரசாங்கம் தட்டிக்கழித்தது!

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொன்னான வாய்ப்புகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தட்டிக்கழித்துவிட்டதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், பிரிந்திருந்த இரு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது.

யுத்தம் யாரால் முடிக்கப்பட்டது என்பதை புறம்தள்ளி, யுத்தத்திற்கு பின்னர், தேசியம் என்ற ரீதியில் எவ்வாறு சவால்களுக்கு முகம் கொடுப்பது என்று சிந்தித்திருக்க வேண்டும்.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணவும், அதற்கான அடித்தளத்தை இடவும் நல்ல சந்தர்ப்பம் கிட்டியிருந்தது.

இதனை நிறைவேற்ற தெற்கின் அரசாங்கத்திற்கு அதிகாரம் இருந்தது. நிறைவேற்று அதிகாரம் இருந்தது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் நிலையாக இருந்தது, மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பன அவர்களின் கைகளிலேயே இருந்தது.

இவை எல்லாவற்றையும் விட, நாடு குறித்து சிந்தித்து தீர்மானம் எடுக்கும் நிலையில் மக்கள் இருந்தார்கள். அன்று தலைவர்கள் தயாராக இருந்திருந்தால், மக்களே பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆனால் அரசாங்கம் அந்த வாய்பை எட்டி உதைத்தது.

நாட்டின் எதிர்க்காலத்திற்கான அரசியலமைப்பினை, குடும்பத்தின் எதிர்க்காலத்திற்காக மாற்றி, 17ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி 18ஐ கொண்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போதுள்ள தலைவர்களும் அடுத்த தேர்தலில் எவ்வாறு வெற்றி பெறலாம், எவ்வாறு ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்று எண்ணாமல், மக்கள் குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net