வவுனியாவில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதில் சிரமம்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.
புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்கள், சாரதி அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்கச் செல்பவர்கள் மற்றும் சாரதிகளுக்கான பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை தேசிய போக்குவரத்து திணைக்களத்தின் கீழான வைத்திய நிறுவனத்திற்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு சுமார் பல மணிநேரமாக காக்க வைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.00 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரிடம் வினாவிய போது ,
மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர் காலை 10.00 மணிக்கு பின்னரே சமூகமளிப்பார் என தெரிவித்தனர்.
மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு வந்திருந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக காலையில் 8.00 மணிக்கு வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு செல்பவர்கள் மாலை 2.00 மணிவரையில் காத்திருந்து மருத்துவ சான்றிதழை பெறவேண்டிய நிலைமை காணப்படுவதுடன் மருத்துவ சான்றிதழுக்காக ஒரு நபரிடம் இருந்து ரூபா 800 கட்டணமாக அறவிடப்படுவதுடன் உரிய தொகையினை மாற்றி சரியாக கொண்டு வருமாறு திருப்பியனுப்புவதாகவும் இவர்களின் அசமந்த போக்கினால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவித்தனர்.
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துக்கு சேவையை பெற்றுக்கொள்ள வரும் அரச உத்தியோகத்தர்கள், தனியார் நிறுவனங்களில் தொழில் புரிபவர்கள், பெண்கள் அனைவரும் வவுனியா தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளதோடு சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பில் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.