சவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது!

சவேந்திர சில்வாவின் நியமனம் பொறுப்புக்கூறலை கேள்விக்குறியாக்கியுள்ளது!

முப்படைகளின் தலைமை அதிகாரியாக சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை யுத்தக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜனாதிபதி மீளப்பரிசீலிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு தெற்கில் இடம்பெற்ற அரசியல் குழப்பத்திற்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நீதியானது என பாராட்டிய சர்வதேசம், சவேந்திர சில்வாவினுடைய நியமனம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

”முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டமைக்கும், நூற்றுக்கணக்கானோர் சரணடைந்து, கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கு காரணமாக இருந்த சவேந்திர சில்வாவை தலைமை அதிகாரியாக ஜனாதிபதி நியமித்திருப்பது நாட்டில் யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக் கூறலை ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாக்கியுள்ளது.

சவேந்திர சில்வாவினுடைய நியமனம், தமிழ் மக்களுக்கு யுத்தக்குற்றம் உட்பட வேறு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது.

கடந்த காலங்களில் வெளிநாடுகளிற்குச் செல்லும்போது எந்த சந்தர்ப்பத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த அவரை, தற்பொழுது முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காத தன்மையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.

சவேந்திர சில்வா தொடர்பான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் சர்வதேசத்திற்கே தெரிந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும்.

இவை அனைத்தையும் தெரிந்திருந்தும் இலங்கை அரசாங்கம் சவேந்திர சில்வாவை முப்படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது, யுத்தக்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலிலிருந்து நழுவிச் செல்லும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தந்திரச் செயல் சவேந்திர சில்வாவினுடைய நியமனத்தில் மட்டுமல்ல, மற்றுமொரு யுத்தக் குற்றவாளியான சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் பதவியினை வழங்கியதும் அரசின் தந்திர செயற்பாடுகளில் ஒன்றாகும்.

இவை அனைத்தும், இராணுவத் தரப்பை ஒருபோதும் யுத்தக்குற்றவாளியாக்க முடியாது என்பதை அரசாங்கம் நேரடியாக கூறுகின்ற விடயமாகும்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மனங்களை உண்மையில் வெல்ல வேண்டுமாக இருந்தால் யுத்தகுற்றவாளியான சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட பதவி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net