படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்!

படுகொலை நினைவேந்தல்கள் எமது உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமையவேண்டும்!

தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கும் ஊக்கமாக அமைய வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிக மோசமான அடக்குமுறைக்குள், உலக தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு வெளிநாட்டவர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோது யாழ்ப்பாணத்தில் உலக தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டு அது கோலாகலமாக நடைபெற்றது.

அதனை இலங்கை அரசாங்கத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனாலே விழாவின் கடைசி நாளன்று பொலிஸார் தேவையற்ற விதத்தில் அதற்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நினைவு நாள் வெறும் நினைவுநாள் மாத்திரமல்ல. தமிழர்கள் மீதான அடக்குமுறையின் நாள். இந்த அடக்குமுறைகள் படுகொலையின் பின்னாளில் ஆயுத போராட்டம் தோற்றம்பெற்றன.

இந்த ஒன்பது பேரின் படுகொலை ஆயுதப் போராட்டம் தோற்றம் பெறக் காரணமனதில் ஒன்று. இந்த படுகொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரியை இலக்குவைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறை பின்னர் ஆயுத போராட்டமாக மாற்றம்பெற்றது.

தமிழர்கள் மீதான அடக்கு முறைகளில் ஒன்றான இந்த படுகொலை நடைபெற்று 45 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் மக்கள் அடக்கப்பட்டுகொண்டே இருக்கின்றார்கள்.

ஆயுதப் போராட்டத்தில் பலர் உயிர்த் தியாகம் செய்தும் பலர் படுகொலைகள் செய்யப்பட்டும் உள்ள நிலையில் கூட தற்போது உள்ள அரசாங்கம் சமஷ்டியை நிராகரிக்கும் போக்கிலும், பௌத்தத்திற்கு முதலிடம் எனும் போக்கிலுமே உள்ளது.

எமது மக்கள் மீது பல்வேறு படுகொலைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனை நாம் அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். இந்த நினைவேந்தல்கள் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை பெற்று கொள்வதற்கு ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்” எனத் தெரிவித்தார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net