வவுனியா- தரணிக்குளத்தில் மக்கள் குடியிருப்புக்குள் மண் அகழ்வு: மக்கள் கடும் எதிர்ப்பு
மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் இருந்து மணல் அகழ்வதற்கு வவுனியா, தரணிக்குளம் புதிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
யுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இடம்பெயர்ந்த மக்களை 1997 ஆம் ஆண்டு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் குடியேற்றியிருந்தார்கள்.
அக் கிராமத்தின் உப குடும்பங்களுக்கும், மேலும் இடம்பெயர்ந்த மக்களுக்கும் காணிகள் வழங்கப்பட்டு தரணிக்குளம் புதிய கிராமத்தில் குடியேற்றம் செய்யப்பட்டனர்.
தரணிக்குளம் புதிய கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அக் கிராமத்தின் நடுவே மக்கள் வாழும் பகுதியில் உள்ள காணிகளில் இருந்து தினமும் பல டிப்பர்களில் மண் அகழப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றது.
குறித்த பகுதியில் உள்ள மக்களது காணிகளுக்கு இன்னும் அரசாங்கத்தால் காணி உறுதிகள் வழங்கப்படாத நிலையில் குறித்த பகுதியில் இருந்த மக்களுக்கு சொந்தமான சில காணிகளை மதபோதகர் ஒருவர் சிறிய தொகைப் பணம் கொடுத்து பெற்றிருந்தார்.
அக் காணிகளில் கச்சான் செய்கை மேற்கொள்ளப்பட்டு அக் கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கப்போவதாகவும் தெரிவித்தே காணிகளைப் பெற்றிருந்தார்.
இதனடிப்படையிலேயே அப்பகுதியில் சில காணிகள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று 3 வருடங்கள் கடந்தும் கச்சான் உற்பத்திக்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது குறித்த காணியில் மண் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்கள் வாழும் பகுதியில் தினமும் 10 இற்கும் மேற்பட்ட டிப்பர்கள் மண்ணிணை அகழ்ந்து செல்வதால் அப்பகுதியில் பாரிய குழிகள் உருவாகி வருவதுடன், அருகில் உள்ள மக்களது வாழிடங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றது.
டிப்பர்கள் தினமும் பயணங்களை மேற்கொள்வதால் வீதிகளும் பயன்படுத்த முடியாத நிலையில் குன்றும் குழியாக காணப்படுகின்றது.
இதன்காரணமாக இக் கிராம மக்கள் போக்குவரத்து செய்வதில் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் குறித்த மண் அகழ்வை நிறுத்தி தமது கிராமத்தை பாதுகாக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் து.நடராஜசிங்கம் அவர்களிடம் கேட்ட போது, குறித்த மண் அகழ்வுக்கு மத்திய அரசாங்கத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அகழ்வு முடிவடைந்ததும் பிரதேச சபையால் மக்களது வீதிகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.


