வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் போலிப்பிரச்சாரம்!
வவுனியாவில் எம்.ஜி.ஆர் சிலை வைப்பது தொடர்பில் எனக்கு எதிராக போலிப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரச்சாரங்களுக்கு எதிராக அடுத்த சபை அமர்வில் தக்க பதிலடி கொடுப்பேன் என வவுனியா நகரசபை உறுப்பினர் லக்ஸ்சனா நாகராஜன் தெரிவித்திருந்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற போது நான் கடும் சுகயீனத்தின் மத்தியில் கலந்து கொண்டிருந்தேன்.
தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி. ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்) சிலை வவுனியாவில் வைப்பதற்கான பிரேரனை வவுனியா நகர சபையில் வந்தது.
எனினும் கடும் சுகயீனம் காரணமாக தொடர்ந்தும் என்னால் சபையில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி. ராமச்சந்திரனின் எம்.ஜி.ஆர் சிலை வவுனியாவில் வைப்பதற்கு எனது முழு ஆதரவையும் வாக்கெடுப்பு வந்ததால் என்னுடைய வாக்கை ஆதரவாக சபையின் தலைவர் மற்றும் உப தலைவரிடம் தெரிவித்து விட்டு சபையில் இருந்து வெளியில் வந்தேன்.
ஆனால் நான் சபையில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளதாக முக நூல் மற்றும் இணையங்கள் சிலவற்றில் செய்திகள் வெளிவந்துள்ளது.
குறித்த செய்தி பொய்ப்பிரச்சாரம் என நான் வன்மையாக கண்டிக்கின்றேன். குறித்த தவறான தகவல்களை வெளியிட்டவர்களுக்கு அடுத்த அமர்வில் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய நான் தக்க பதிலடி கொடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.