மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம்!

மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் தமிழர்களின் உடல்களாக இருக்கலாம்!

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள், ஈழப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழைமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை வட மாகாணத்தில் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கிடைத்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் தமிழர்களுடையதாக இருக்கலாம் என்று எழுப்பப்படும் ஐயங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

மன்னார் நகரில் கூட்டுறவு சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளம் தோண்டிய போது பூமிக்கு அடியில் ஏராளமான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவ வல்லுநர்கள், தடயவியல் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

அவர்களின் ஆய்வில் இதுவரை 300க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

125 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன.

மன்னார் நகரில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் யாருடையவை என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவின் மியாமி நகரில் உள்ள ஆய்வகத்துக்கு எலும்புக்கூடுகள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றின் முடிவு வெளிவந்த பிறகு தான் இதுகுறித்த உண்மைகள் வெளிவரும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆனாலும், சந்தர்ப்ப சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது எலும்புக்கூடுகள் தமிழர்களுடையதாக இருக்கலாம் என நம்பத் தோன்றுகிறது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழப்போரில் விடுதலைப்புலிகள் போரை நிறுத்திய நிலையில், ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படைகள் கொடூரமான முறையில் படுகொலை செய்தன.

அடுத்த சில நாட்களுக்குப் பன்னாட்டு ஊடகங்களையும், உள்நாட்டுச் செய்தியாளர்களையும் யுத்தம் நடந்த வடக்கு மாகாணத்திற்குள் அனுமதிக்காத இலங்கைப் படைகள், கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களின் உடல்களை அழிக்கும் பணியிலும், அகற்றும் பணியிலும் ஈடுபட்டன. அவ்வாறு போர் முனையிலிருந்து அகற்றப்பட்ட தமிழர்களின் உடல்களில் ஒரு பகுதி மன்னார் நகரில் புதைக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தமிழர்களுடையது தான் என்று கருதுவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக, மன்னார் பகுதியில் ஒரே இடத்தில் 300 பேரை புதைக்கும் அளவுக்கு அப்பகுதிகளில் அதிக அளவிலான உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

ஒருவேளை எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் கடந்த காலத்தில் இடுகாடாக இருந்திருக்கலாமா? என்றால் அதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், இடுகாடாக இருந்தால் உடல்கள் இடைவெளிவிட்டு கிடைமட்டமாகத் தான் புதைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இப்போது கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அவ்வாறு புதைக்கப்படவில்லை. மாறாக, ஒரே இடத்தில் ஒன்றின்மீது ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டிருக்கின்றன என்பதால் அவை, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் உடல்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு இன்று வரை தண்டனை வழங்கப்படவில்லை என்பதே உலக சமுதாயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.

ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை நிரூபிக்கத் தேவையான பல ஆதாரங்கள் கிடைத்தும் அவற்றைப் பாதுகாக்காமல் தவறவிட்டதன் மூலம் தமிழர்களுக்கு உலக சமுதாயம் பெருந்துரோகம் செய்துள்ளது. இனியும் அத்தகைய துரோகங்களை ஈழத்தமிழருக்கு பன்னாட்டு சமுதாயம் இழைக்கக்கூடாது.

இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு உறுதி செய்துள்ளது. எனினும், அதனடிப்படையில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கான நீதிமன்ற விசாரணையை இலங்கை அரசு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில், மன்னாரில் தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அங்கு இனப்படுகொலை நடந்ததை உறுதி செய்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தி, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை ஆவணப்படுத்த, சர்வதேச அளவில் நடுநிலையான, சுதந்திரமான விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்.

அந்த அமைப்பு ஆவணப்படுத்தும் ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்த இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net