முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது!

மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது!

முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்,

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குப் பின்னால் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்ற சமயம் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குறித்த சைக்கிளை தீயிட்டுக் கொளுத்தியுள்ளதாக குறித்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவதை அவதானித்த அதன் உரிமையாளர் சம்பவ இடத்துக்குச் சென்ற போது அந்த இடத்திலிருந்து தீ வைத்த குறித்த நபர் தப்பிச் செல்வதைக் கண்டு பின்தொடர்ந்து துரத்திய போது குறித்த நபர் தப்பி சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் உரிமையாளர் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் நேற்று(23) அதிகாலை முறைப்பாட்டைப் பதிவு செய்ததையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் மேற்படி நபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net