இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்!

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்!

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் ஏற்பாடு செய்த ”போதைப் பொருளிலிருந்து விடுதலையான நாடு” எனும் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிகழ்வு கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நேற்று (28) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

போதைப் பொருளை விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த அந்தஸ்தில் இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அரசியல் தலைவர்கள், பொலிஸார், அதிகாரத்திலுள்ளவர்கள் போதைவஸ்தோடு தொடர்புள்ளவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது.

இன்னும் 10 அல்லது 15 வருடங்கள் ஆகும் போது இளைஞர் சமூகத்தை இழக்க வேண்டிய பயங்கரமானதொரு நிலை ஏற்படும்.

இதற்கு ஜனாதிபதியும் கடுமையான சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறார்.அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது சில சகோதரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நான் அதனை எதிர்க்கவில்லை. நியாயமானதாக கருதுகிறேன்.

தமிழர் ஒருவரை கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக நியமித்திருந்தால் சில வேளை இதைவிட மோசமான ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.

தமிழர் முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு என்றும் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு எதிர்ப்பு என்றும் சொல்லிச் சொல்லி காலத்தை கடத்தியிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் 80 வீதமான மக்கள் தமிழ் பேசும் மக்கள். உங்கள் மொழியில் ஆளுநருடன் பேசுவதற்கான சூழலை ஜனாதிபதி உருவாக்கித் தந்திருக்கிறார். இதற்கு நாம் ஜனாதிபதிக்கு நன்றி செலுத்த வேண்டும்.

Copyright © 9332 Mukadu · All rights reserved · designed by Speed IT net