கிளிநொச்சியில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! -எதிர்த்து முறைப்பாடு!

கிளிநொச்சியில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! -எதிர்த்து முறைப்பாடு!

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 29 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை வனவளத் திணைக்களம் ஆக்கிரமித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது. இதற்கமைய காணித் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்கள அதிகாரிகளும் இன்று விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழு ற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விசாரணைகளின் பின்னர் ஜெயபுரம் வடக்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் அரசப்பன் ராமர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் 1990ஆம் ஆண்டு 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை நாள் இடம்பெயர்ந்த மக்களுக்காக ஜெயபுரம் பகுதியில் சுமார் 548 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருந்தது.

இந்தக் காணிகளில் மக்கள் ஆரம்பத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதும் அது பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து வந்த யுத்த நிலைமைகள் அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றதுடன் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்றிருந்தனர்.

மீண்டும் 2010 ஆம் ஆண்டு மக்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி தமது காணிகளை துப்புரவு செய்தபோது அப்பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பதாக கூறிய ராணுவம் மக்களை தடுத்தது.

மீண்டும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 2017 ஆம் ஆண்டு காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டபோது. அந்த காணிகளை துப்பரவு செய்வதற்கு மக்கள் வசதியற்றவர்களாக இருந்தனர் இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுடன் தொடர்புகொண்டு மக்கள் விடயத்தைக் கூறி இருந்தனர்.

இதற்கமைய சுமார் இரண்டு மில்லியன் ரூபா நிதியை மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக பெற்று பூநகரி பிரதேச செயலரிடம் கையளித்திருந்தார்.

பிரதேச செயலர் அந்த நிதியை ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பினூடாக மக்களுக்கு கையளித்த நிலையில் சுமார் 70 ஏக்கர் நிலம் அந்த நீதியின் ஊடாக திருத்தி அமைக்கப்பபட்டது.

இந்நிலையில் அங்கு வந்த வனவளத் திணைக்களம் குறித்த பகுதி தமது ஆளுகைக்குட்பட்ட வனப்பகுதி என கூறியதுடன் மக்களை தமது காணிகளுக்குள் போகவிடாது தடுத்தனர்.

ஆனாலும் அந்தப் பகுதியில் தற்போது செல்வந்தர்கள் சிலர் வனவளத் திணைக்களத்தின் அனுசரணையுடன் விவசாயம் செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது காணிகளை எம்மிடம் பெற்று கொடுக்குமாறு கேட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net