மாணவன் மீது தாக்குதல் முயற்சி – சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில்!

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி – சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில்!

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்டமையால் சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கடந்த சில நாட்களிற்கு முன்னர் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவணைதொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்று வந்தது.

இதன்போது அங்கு வருகை தந்திருந்த பொலிசாரிடம் குறித்த பாதிக்கப்பட்ட சிறுவன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல் தந்தால் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் குறித்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஊடகங்களிற்கு இன்று கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோரால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த தாக்குதலில் தனது மகனிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்த சிறுவனின் தந்தை முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் பொலிசாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதவிடத்து, எதிர்வரும் காலங்களில் எமது சமூகம் சீரழிந்து போகும் எனவும், போதைப்பொருள் தொடர்பில் எவரும் தகவல்களை வழங்க முன்வர மாட்டார்கள் எனவும் அவர் இதன்போது ஊடகங்களின் முன்னால் ஆதங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © 2010 Mukadu · All rights reserved · designed by Speed IT net