பன்றிக்காய்ச்சல் காரணமாக 29 நாட்களில் 75 பேர் பலி!

பன்றிக்காய்ச்சல் காரணமாக 29 நாட்களில் 75 பேர் பலி!

பன்றிக்காய்ச்சலுக்குள்ளாகி ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 29 நாட்களில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நோயின் வீரியம் அதிகமாகக் காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்த ஆண்டில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்த இன்று வரையில் 1911 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்தாக்கம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அத்தோடு இதுவரையில் 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிம்லா பகுதியில் பன்றிக்காய்ச்சல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 67பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், 20 பேருக்கு நோய் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதோடு, 4 பேர் தனியறையில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியர் ஜனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகளின் மூலம் பண்றிக்காய்ச்சல் நோயின் தாக்கத்தை அறியலாமென்றும், குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் நீண்ட காலமாக நோய் தாக்கத்துக்குட்பட்டுள்ள நோயாளிகளுக்கும் இந்த நோய் பரவுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net