சிறுவன் தாக்கப்பட்டமைக்கும் கஞ்சா தகவலுக்கும் தொடர்பில்லை!

சிறுவன் தாக்கப்பட்டமைக்கும் கஞ்சா தகவலுக்கும் தொடர்பில்லை!

கிளிநொச்சியில் சிறுவன் தாக்கப்பட்டதிற்கும், கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமைக்கும் எவ்வித தொடர்புமில்லை என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவன், துவிச்சக்கரவண்டியில் பயணித்தபோது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிறுவனது துவிச்சக்கர வண்டிக்கு முன்பாக தமது மோட்டார் சைக்கிளை திருப்பியுள்ளனர். இதனால் ஏற்பட்ட விபத்திலேயே சிறுவன் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பாக தகவல் வழங்கியமையால் சிறுவன் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

அத்துடன் கஞ்சா கடத்தல்கள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பாக பொதுமக்களால் வழங்கப்படும் தகவல்கள் பொலிஸாரால் இரகசியமான முறையிலேயே பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவன் கஞ்சா தொடர்பாக தகவல் வழங்கியமையாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்ததுடன் இன்று இதனைக் கண்டித்து கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net