அம்பாறையில் இரண்டு தினங்களாக பலத்த மழை.

அம்பாறையில் இரண்டு தினங்களாக பலத்த மழை.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இம்மாவட்டத்தின் அம்பாறை நகர்ப் பிரதேசத்தில் 24.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.ஏ.நஹீம் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 45.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பிரதேசத்தில் 16.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், எக்கல் ஓயா பிரதேசத்தில் 14.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள், வீதிகள், விவசாயச் செய்கைகள்,; என்பன நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன.

தொடர் மழையினால் வீதிகள் பலவற்றில் நீர் நிறைந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கும் பாதிப்பேற்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பிலுவில், தம்பட்டை, ஆலையடிவேம்பு, சாகாமம், இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை, சாய்ந்தமருது, மாவடிப்பள்ளி, காரைதீவு, நிந்தவூர், அட்டப்பள்ளம், சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, திராய்க்கேணி, ஒலுவில், பாலமுனை ஆகிய பிரதேங்களின் தாழ்நிலப் பகுதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடற்பரப்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக மீனவர்களில் பெரும்பாலானோர் கடற்றொழிலுக்குச் செல்லவில்லை.

அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருவதால் விவசாயிகள் தமது அறுவடை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடைக்குத் தயாரக இருந்த விவசாயச் செய்கைகளில் நீர் நிரம்பியுள்ளதால் விவசாயச் செய்கையாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net