இலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது!

இலங்கையினுள் நியாயமான விசாரணை நடைபெறாது!

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொரு விடயமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.

கால அவகாசம் என்பதில் மயக்கம் உள்ளது. விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

மறுபக்கத்தில் சர்வதேச கண்காணிப்புக்கான இடைவெளி வழங்கப்படுவதாகவும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், தொடர்ந்தும் கால அவகாசத்தினை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கையினுள் நியாயமான விசாரணையொன்று நடைபெற்று நீதி கிடைக்கும் என்பது எப்போதுமே நடைபெறாதவொரு விடயம்.

ஆகவே, சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பும், அழுத்தமும் அவசியமாகின்றது. ஜனாதிபதி மைத்திரியின் ஒக்டோபர் 26 அரசியல் புரட்சியின் போது, கூட்டமைப்பு நடந்துக்கொண்ட முறைமையை சர்வதேச நாடுகள் வரவேற்றுள்ளன.

எம்மீதான அவர்களின் பார்வை எப்போதும் தொடர்ந்தும் இருக்கின்றது. ஆனாலும், காலம் செல்லச்செல்ல இலங்கைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடலாம். அபிவிருத்திக்களை முன்னெடுக்கலாம் என்று கூறுவதற்கான சூழல்கள் உருவாகின்றமையை நோக்கிய போக்குகளே தென்படுகின்றன.

அதனடிப்படையில் எமது விடயங்கள் ஆபத்தான காலக்கட்டத்திற்குள் செல்கின்றதென தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொறுப்புக் கூறலுக்காக மீண்டும் மனித உரிமை கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியுள்ள சூழலில் எந்த நாடுகள் கைகொடுக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள் என வினவிய போது,

அவர் தெரிவித்ததாவது,

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி இலங்கை தொடர்பில் மீண்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அழுத்தமானதாக பிரயோகிக்கப்படலாம். அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் ஜேர்மன் புதிதாக அங்கத்துவம் பெற்றுள்ளது.

பிரித்தானியாவும், கனடாவும் அங்கத்துவத்தில் உள்ளன. ஆகவே, இந்த நாடுகள் ஏனைய நாடுகளுடன் இலங்கை குறித்து பேச்சு நடத்தி அடுத்த கட்டத்தினை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Copyright © 1254 Mukadu · All rights reserved · designed by Speed IT net